7 மாணவிகளுக்கு கொரோனா; விடுதி, கட்டு்ப்பாட்டு பகுதியாக அறிவிப்பு


7 மாணவிகளுக்கு கொரோனா; விடுதி, கட்டு்ப்பாட்டு பகுதியாக அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 1:53 AM IST (Updated: 28 Aug 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மேலும் 7 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விடுதி, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

நெல்லை:
நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் மேலும் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விடுதி, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவக்கல்லூரி

நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 16-ந்தேதி முதல் கல்லூரி திறக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு செய்முறை பயிற்சிக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 3 மாணவிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 100 மாணவிகளுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், மேலும் 4 மாணவிகளுக்கு கொேரானா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த மாணவிகளுடன் விடுதியில் தங்கி இருந்த மேலும் 200 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்ய சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.

மேலும் 7 பேருக்கு கொரோனா

இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் மேலும் 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 7 மாணவிகளும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு பகுதி

இதையொட்டி கல்லூரி வளாகத்தில் கிழக்கு நுழைவு வாசல் அருகில் உள்ள மாணவிகள் விடுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கிருந்து மாணவிகள் வெளியே செல்லவும், பெற்றோர் அங்கு வரவும் தடை விதிக்கப்பட்டது. இதுதவிர மீதமுள்ள மாணவ-மாணவிகளுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி நேற்று மாநகராட்சி ஊழியர்கள் விடுதி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பொடி தூவினர்.
மேலும் கல்லூரி வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தற்போது விடுதியில் இருக்கும் மாணவிகளுக்கு 14 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அப்போது யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டாமல் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதி தளர்த்தப்படும், என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Next Story