கல்லூரி மாணவிைய கொன்று காதலன் தற்கொலை
வேறொருவருடன் பழகியதால் கல்லூரி மாணவியை கொன்று காதலன், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சிவமொக்கா: வேறொருவருடன் பழகியதால் கல்லூரி மாணவியை கொன்று காதலன், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல்
சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா எப்பினகெேர கிராமத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 22). இவர் சிவமொக்கா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். ஒசநகர் தாலுகா தளலே கிராமத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் ரிப்பன்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சாகரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
வேறொருவருடன் பழக்கம்
இந்த நிலையில், சிவமொக்காவில் தங்கி நர்சிங் படித்து வரும் கவிதாவுக்கும், பத்ராவதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்ததாக தெரிகிறது. இது, சிவமூர்த்திக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவமூர்த்தி, வேறொரு நபருடன் பழகுவதை நிறுத்தும்படி கவிதாவை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி சிவமூர்த்தி சிவமொக்காவுக்கு சென்று கவிதாவை சந்தித்து பேசினார். பின்னர், அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சாகருக்கு வந்தார்.
கொலை
சாகர் அருகே நேரலிகே கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் வைத்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சிவமூர்த்தி வேறொருவருடன் பழகுவது குறித்து கவிதாவிடம் கேட்டுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவமூர்த்தி, கவிதாவின் துப்பட்டாவை எடுத்து அவருடைய கழுத்தை நெரித்துள்ளார்.
இதில், மூச்சுத்திணறி கவிதா மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து சிவமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தற்கொலை
பின்னர் சிவமூர்த்தி வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது, போலீசில் சிக்கி விடுவோமோ என பயந்த சிவமூர்த்தி, வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து சிவமூர்த்தி மயங்கி கிடப்பதை பார்த்து அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், சிவமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஒசநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சிவமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக ஒசநகர் போலீசார் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களிடம் தன்னுடைய காதலி கவிதாவை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணை
சிவமூர்த்தி கூறிய தகவலின்பேரில் சிவமொக்கா துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், தீர்த்தஹள்ளி துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தவீரா, ஒசநகர் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மதுசூதன் மற்றும் போலீசார் நேரலிகே கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கவிதா, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒசநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி வேறொரு நபருடன் பழகிய ஆத்திரத்தில் அவரை கொன்று வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story