மைசூரு நகைக்கடை கொள்ளை வழக்கில் 6 பேர் கைது


மைசூரு நகைக்கடை கொள்ளை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 2:09 AM IST (Updated: 28 Aug 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு நகைக்கடை கொள்ளை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெவ்வேறு மாநிலங்களில் பிடிபட்டதால் அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

மைசூரு: மைசூரு நகைக்கடை கொள்ளை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெவ்வேறு மாநிலங்களில் பிடிபட்டதால் அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். 

நகைக்கடையில் கொள்ளை

மைசூரு டவுன் வித்யாரண்யபுரம் பகுதியில் தர்மேந்திரா என்பவருக்கு ெசாந்தமான நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி வாடிக்கையாளர் போல நகைக்கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், தர்மேந்திராவை தாக்கி நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது மர்மநபர்கள் துப்பாக்கியால் தர்மேந்திராவை நோக்கி சுட்டனர். 

அந்த சமயத்தில் அவர் கீழே படுத்து கொண்டதால், நகை வாங்க கடைக்கு வந்த சந்துரு என்பவர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நகைக்கடையில் கொள்ளையடித்த மர்மநபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்மூலம் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், மர்மநபர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. 

2 பேர் கைது

இந்த நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெவ்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களை மைசூருவுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மைசூருவில் நேற்று கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூருவில் நகைக்கடையில் நடந்த கொள்ளை, கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மைசூருவை சேர்ந்தவர், மற்றொருவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மற்ற குற்றவாளிகள் இருப்பிடமும் தெரியவந்தது. அவர்கள் மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. 

4 பேரை அழைத்து வருவதில்...

இதையடுத்து அந்த மாநில போலீசாரின் உதவியுடன் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தந்த மாநில போலீசாரின் காவலில் 4 பேரும் உள்ளனர். இதனால் தனிப்படை போலீசார், 4 பேரையும் அழைத்து வர அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அந்தந்த மாநில கோர்ட்டுகளில் 4 பேரையும் ஆஜர்படுத்தி மைசூருவுக்கு அழைத்து வருவார்கள். 4 பேரும் வெவ்வேறு மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  

பல்வேறு கோணங்களில் விசாரணை

மைசூருவில் மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர் வாயை திறந்து கூறினால் தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story