கர்நாடகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய ‘இ-சிரம்' திட்டம்


கர்நாடகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய ‘இ-சிரம் திட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2021 8:39 PM GMT (Updated: 27 Aug 2021 8:39 PM GMT)

அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய ‘இ-சிரம்' திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு: அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்ய ‘இ-சிரம்' திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பணி பாதுகாப்பு

தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அரசின் இ-சிரம் என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்ய முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, வாழ்க்கை பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட எந்த உதவிகளும் கிடைப்பது இல்லை. அவர்களுக்கு வாழ்க்கை பாதுகாப்புடன் சமமான வேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

உழைப்புக்கு பலன்

கூலித்தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, விவசாய தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும். நாட்டின் வளத்தை பணத்தால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. பணத்தை பயன்படுத்தி சொத்துகளை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு தொழிலாளர்களின் உழைப்பு தேவைப்படுகிறது.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நாட்டின் பலம். பொருளாதாரம் என்ற பிரமிட்டின் அடிப்பகுதியாக தொழிலாளர்கள் விளங்குகிறார்கள். அவர்கள் பலமாக இருந்தால் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வர முடியும். கர்நாடகத்தில் 1.8 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையான அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Next Story