கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி
கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு கொகாேரானா தடுப்பூசி போடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு கொகாேரானா தடுப்பூசி போடப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து உள்ளார்.
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி
கூடுதல் டோஸ் தடுப்பூசிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் டெல்லி சென்றிருந்தேன். மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளது. அதனால் வருகிற 1-ந் தேதி முதல் தினமும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்படும். அதாவது தினசரி 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம். சோதனை அடிப்படையில் கடந்த 25-ந் தேதி 5 லட்சம் டோஸ் தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது.
ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து மேகதாது, கிருஷ்ணா, பத்ரா மேலணை திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன்.
சுப்ரீம் கோர்ட்டில் நதிநீர் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் விவாதித்தேன். மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தேன். இதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறியுள்ளார்.
வேலை வாய்ப்புகள்
கர்நாடகத்தில் பெரிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும். இதற்கு வரைவு திட்டம் ஒன்றை தாக்கல் செய்யும்படி மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ்கோயல் கூறினார். இதன் மூலம் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தேசிய-சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். மைசூரு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தவறு செய்தவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை என்னிடம் நேரடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் டி.ஜி.பி. மைசூருவுக்கு சென்றுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து கண்காணிக்கும்படி டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா 3-வது அலையை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து வருகிற 30-ந் தேதி நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தி வழிகாட்டுதல் வெளியிடப்படும்.
மந்திரிசபை விரிவாக்கம்
நான் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க முடியவில்லை. மீண்டும் நான் டெல்லி செல்லும்போது அவரை சந்தித்து மந்திரிசபையில் உள்ள காலியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை நடத்துவேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story