சிறை கைதிகளின் குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை-சேலத்தில் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி


சிறை கைதிகளின் குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை-சேலத்தில் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி
x
தினத்தந்தி 28 Aug 2021 4:14 AM IST (Updated: 28 Aug 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

சிறை கைதிகளின் குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.

சேலம்:
சிறை கைதிகளின் குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார்.
சிறையில் ஆய்வு
தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் நேற்று காலை சேலம் வந்தார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் கிளை சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் 30-க்கும் மேற்பட்ட கைதிகளை சந்தித்து அவர்களுடைய குழந்தைகளின் கல்வி நிலை, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து ஆணைய உறுப்பினர் ராமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறையில் இருக்கும் கைதிகளுடைய குழந்தைகளை நேரில் கண்டறிந்து அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக சேலம் மத்திய சிறையில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். இந்த சிறையில் குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இல்லை. 
படிப்பதற்கு சிரமம்
ஆண்கள் சிறையில் 23 கைதிகளிடமும், பெண்கள் சிறையில் 14 கைதிகளிடமும் கலந்துரையாடினோம்.அப்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி மற்றும் ஏதாவது உதவிகள் தேவைப்படுகிறதா? என ஆராய்ந்தோம். இதில் சிலர் தங்களது குழந்தைகள் படிப்பதற்கு சிரமம் அடைகின்றனர் என்று கூறினர். சேலம் மாவட்டத்தில் 56 குழந்தை பாதுகாப்பு இல்லங்கள் இருக்கிறது.
ஆகையால் அவர்கள் சிறை சூப்பிரண்டிடம் மனு அளித்தால் அந்த இல்லங்களில் அவர்களுடைய குழந்தைகள் சேர்க்கப்பட்டு, படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில கைதிகள் தங்களது குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை என்று கூறினர். இந்த குழந்தைகள் வசிக்கும் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலரை அணுகினால் சான்றிதழ் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை திருமணம்
சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 23 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். மேலும் 17 பேருக்கு உதவிகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பலரை பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். 5 பேர் கல்லூரிகளில் படித்து கொண்டிருக்கின்றனர்.
குழந்தை திருமணங்களை தடுக்க அரசு 6 வகையான குழுக்களை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை சட்டமாக்க வேண்டும். மேலும் இந்த குழுக்களை வலுப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்வோம்.
இவ்வாறு அவர்கூறினார். பேட்டியின் போது சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story