பெண் கவுன்சிலரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை நடத்தாமல் தலைவர் கவுன்சிலர்கள் போராட்டம் கலெக்டரிடம் நேரில் புகார்


பெண் கவுன்சிலரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை நடத்தாமல் தலைவர் கவுன்சிலர்கள் போராட்டம் கலெக்டரிடம் நேரில் புகார்
x
தினத்தந்தி 28 Aug 2021 2:14 PM IST (Updated: 28 Aug 2021 2:14 PM IST)
t-max-icont-min-icon

பெண் கவுன்சிலரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை தலைவர், கவுன்சிலர்கள் நடத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அவர்கள் தர்மபுரி கலெக்டரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

தர்மபுரி:
பெண் கவுன்சிலரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஊராட்சிக்குழு  கூட்டத்தை நடத்தாமல் தலைவர், கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அவர்கள் தர்மபுரி கலெக்டரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
தடுத்து நிறுத்தம்
தர்மபுரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், துணைத்தலைவர் சரஸ்வதி முருகசாமி உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள் அந்த அலுவலக வளாகத்துக்கு வந்தனர். அப்போது அலுவலக நுழைவு வாசலில் கூட்டத்துக்கு வந்த மாவட்ட பெண் கவுன்சிலர் சங்கீதாவை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அங்கிருந்த மற்ற கவுன்சிலர்கள் போலீசாரிடம் ஏன் கவுன்சிலரை தடுத்து நிறுத்தினீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் எங்களுக்கு வந்த உத்தரவின்பேரில் பாதுகாப்பு பணிக்கு வந்தோம். கூட்டத்திற்கு வந்தவர் பெண் கவுன்சிலர் என்று தெரியவில்லை என்று கூறினர். இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு போலீசாரை யார் அழைத்தது? என்று கவுன்சிலர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் போராட்டம்
இதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்தாமல் திடீர் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எதற்காக பெண் கவுன்சிலர் சங்கீதாவை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை.
கூட்டத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தலைவர் என்ற முறையில் நான்தான் போலீசுக்கு பாதுகாப்பு கேட்டு தகவல் தர வேண்டும். யார் போலீசுக்கு பாதுகாப்பு கேட்டு தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது, அவரும் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார். இதனால் நாங்கள் கூட்டத்தை நடத்தாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார்.
கலெக்டரிடம் புகார்
இதுதொடர்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜியிடம் கேட்டபோது, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக போலீசார் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா? அல்லது கூட்டத்தில் கவுன்சிலர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டார்களா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிவரும் என்று கூறினார்.
பின்னர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் கவுன்சிலர்கள் அனைவரும் தர்மபுரி கலெக்டர் திவ்யதர்சினியை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர். பாதுகாப்பு பணிக்கு போலீசாரை யார் அழைத்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story