திருவண்ணாமலை அருகே; பொக்லைன் எந்திரத்தை திருடிய 4 பேர் கைது
திருவண்ணாமலை அருகே வீட்டு முன் நிறுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகில் உள்ள சேரியந்தல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 56). இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த 26-ந் தேதி இரவு வழக்கம்போல் வீட்டின் அருகில் தனது பொக்லைன் எந்திரத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார்.
நள்ளிரவு பொக்லைன் எந்திரத்தை மர்ம நபர்கள் திருடி செல்வதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர் எழுந்து வந்துபார்த்தபோது பொக்லைன் எந்திரத்தை காணவில்லை. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு கோவிந்தசாமி தகவல் தெரிவித்து உள்ளார்.
அதன்பேரில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது மணலூர்பேட்டை ஜங்சன் பகுதியில் வந்த பொக்லைன் எந்திரத்தையும், அதற்கு முன்பு சென்ற காரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த பொக்லைன் எந்திரம் கோவிந்தசாமிக்கு சொந்தமானது என்பதும், காரில் வந்த 2 பேரும் திருடிய பொக்லைன் எந்திரத்துக்கு பாதுகாப்பாக வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பொக்லைன் எந்திரம் மற்றும் காரில் வந்த திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பாண்டித்துரை (25), ஆணாய் பிறந்தான் கிராமத்தை சேர்ந்த திருமால் (25), சுபாஷ் (21) மற்றும் விண்ணவனூரை சேர்ந்த சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் ஏற்கனவே திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொக்லைன் எந்திரத்தை திருடி சேலத்தில் விற்று உள்ளது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story