பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்


பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Aug 2021 9:08 PM IST (Updated: 28 Aug 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டத்தை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.


திண்டுக்கல்:
75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் 2.0 எனும் விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்படுகிறது. இது, அனைவரும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து நேற்று, ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் தொடங்கியது. இதனை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஓட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது.
உறுதிமொழி 
இதையடுத்து அங்கு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, நான் என்னை ஆரோக்கியமாக வைத்திருப்பேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகமும் ஆரோக்கியமாக வாழ ஊக்குவிப்பேன். தினமும் காலையில் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வேன் என்று கலெக்டர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாறன், தேசிய மாணவர் படை கர்னல் சந்தீப்மேனன், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சரண் வி கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story