திண்டுக்கல் மாநகராட்சியில் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய கடைகளில் ஸ்டிக்கர்
ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய கடைகளில் திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபார கடைகளின் ஊழியர்களுக்கு தனியாக சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த வகையில் இதுவரை 6¼ லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதில் 1½ லட்சம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் சர்வசாதாரணமாக கடைகளுக்கு செல்கின்றனர். எனவே கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் ஒருகட்டமாக 100 சதவீதம் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட கடைகளை மக்கள் தெரிந்து கொள்வதற்கு புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி திண்டுக்கல்லில் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட கடைகளில் மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
இதனை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் திண்டுக்கல் மெயின்ரோடு, பழனி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்ட கடைகளில் அவர் ஸ்டிக்கர் ஒட்டினார். அப்போது அனைத்து கடைகளிலும் வேலை செய்யும் ஊழியர்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் மாநகர்நல அலுவலர் இந்திரா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story