விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.


விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.
x
தினத்தந்தி 28 Aug 2021 4:04 PM GMT (Updated: 2021-08-28T21:34:02+05:30)

விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.


கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக பூங்காக்கள் திறக்கப்பட்டன. மேலும் நட்சத்திர ஏரியில் படகுசவாரி தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாக வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) கிருஷ்ணஜெயந்தி விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் நேற்று குவிந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் பெருமாள்மலை முதல் வெள்ளிநீர் வீழ்ச்சி வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். 
வெள்ளி நீர்வீழ்ச்சி
நட்சத்திர ஏரியில் படகுசவாரி மற்றும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அத்துடன் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றின் முன்பு புகைப்படம் எடுப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். மேலும் அவர்கள் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். 
வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மலைக்கிராமங்களுக்கு வாகனங்களில் சென்று பொழுதை கழித்தனர். இதன்காரணமாக பூம்பாறை மலைப்பாதையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக மருத்துவமனைக்கு வந்த ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினர். 
இதற்கிடையே கொடைக்கானலுக்கு கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்களை போலீசார் தீவிர தணிக்கை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story