விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல்போன 106 செல்போன்கள் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல்போன 106 செல்போன்களை போலீசாா் மீட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019, 2020, 2021 ஆகிய 3 ஆண்டுகளில் சுமார் 500 செல்போன்கள் காணாமல் போயுள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உரிய எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் அந்த புகார் மனுக்கள் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் காணாமல் போயிருந்த செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணை போலீஸ் சூப்பிரண்டு உமாசங்கர் தலைமையில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், சைபர்கிரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி, போலீசார் மகாமார்க்ஸ், கிருஷ்ணகுமார், இளவரசன், உதயகுமார், இளங்கோவன், செல்வி ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த தனிப்படை போலீசார், சைபர்கிரைம் மூலம் சம்பந்தப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ. எண்ணை வைத்து அந்த செல்போன்கள் தற்போது இருக்கும் இடம், யாரிடம் உள்ளது என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 106 விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் எண்களை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாரை அவர் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், காணாமல்போன செல்போன்களை பல வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் வைத்திருந்தனர். அவர்களை தொடர்புகொண்டு பேசியதன்பேரில் சிலர் நேரடியாக வந்து போலீசில் செல்போன்களை ஒப்படைத்தனர். நேரில் வர முடியாத சிலர் அந்த செல்போன்களை கூரியர் மூலமாகவும் அனுப்பி வைத்தனர். இதன் அடிப்படையில் தற்போது வரை 106 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள செல்போன்களை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடக்கிறது என்றார்.
Related Tags :
Next Story