கரும்பில் இடைக்கணு புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி மையம் அமைக்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கரும்பில் இடைக்கணு புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி மையம் அமைக்க வேண்டும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்
கள்ளக்குறிச்சி
குறைகேட்பு கூட்டம்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, வேளாண்மை இணை இயக்குனர் ஜெகன்நாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி, கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்தினி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இடைக்கணுபுழு தாக்குதல்
கூட்டத்தில் விவசாயி தங்கவேல் கூறும்போது, சாத்தனூர் அணையிலிருந்து வரும் நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பில் இடைக்கணு புழு நோய் தாக்கி கரும்பு கருகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி மையம் அமைக்க வேண்டும். இடைக்கணு புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்புகளை சீனியார்ட்டி பார்க்காமல் அதிகாரிகள் ஆய்வு செய்து அரவைக்கு வெட்டு உத்தரவு வழங்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் இடைக்கணு புழு தாக்கி பாதிக்கப்பட்ட கரும்புகளை அரவைக்கு வெட்டு உத்தரவு வழங்க சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டதோடு, ஒட்டுண்ணி மையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கைக்கான் வளைவு திட்டம்
இதையடுத்து விவசாயி குபேந்திரன் பேசும்போது, வேளாண்மை துறை சார்ந்த திட்டங்கள் குக்கிராமத்தை சென்றடைய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்றார். இதற்கு பயிற்சி முகாம் நடத்த வேளாண்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்டாலின்மணி பேசும்போது, ஜமாபந்தியில் பட்டா மாற்றம் செய்ய கொடுக்கப்பட்ட மனு மீது இதுவரை தீர்வு காணவில்லை. நில அளவையாளர்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாற்றம் செய்கிறார்கள். கல்வராயன்மலையில் கைக்கான் வளைவு திட்டத்தால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆக்கிரமிப்பு
கடந்த 1967-ம் ஆண்டு மணிமுக்தா அணை கட்டுவதற்காக அங்கு வசித்த 93 குடும்பங்களுக்கு வடதொரசலூர் பகுதியில் ஒரு குடும்பத்திற்கு 3 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளார்கள். ஆனால் இதுவரை அந்த நிலத்துக்கோ, கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கோ பட்டா வழங்காததால் விவசாயத்துக்கும் மற்றும் வீடுகளுக்கும் மின் இணைப்பு பெற முடியவில்லை.
உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஜெயராமன், சீனிவாசன் கூறும் போது, ம.குன்னத்தூரில் நீர் வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஏ.குமாரமங்கலத்தில செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெலை மாதக்கணக்கில் எடைபோடாமல் வைத்துள்ளனர். ஆனால் வியாபாரிகள் கொண்டு செல்லும் நெல்லை உடனடியாக எடைபோட்டு கொள்முதல் செய்கின்றனர் என புகார் தெரிவித்தனர்.
இது தவிர பல்வேறு விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story