வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.45 லட்சம் மோசடி வியாபாரி கைது
வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்,
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் ரெய்மன்டு மனைவி பபியோலா (வயது 40). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் சண்முகஆனந்த் (36) என்பவர், பபியோலாவிடம் சென்று தான் சாக்லேட் வியாபாரம் செய்து வருவதாகவும், இந்த தொழிலை நாம் இணைந்து பெரிய அளவில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் நீங்கள் எந்தவொரு வேலையும் செய்ய வேண்டாம், நானும் எனது மனைவி ரேவதியும் வேலை பார்த்து மாதந்தோறும் லாபத்தை கொண்டு வந்து தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர், சண்முக ஆனந்திடம் பல தவணைகளில் ரூ.25 லட்சமும், 24 பவுன் நகைகளையும் கொடுத்தார்.
வீட்டுமனை
அதன் பிறகு மீண்டும் சண்முக ஆனந்த், பபியோலாவிடம் சென்று தனது மனைவி ரேவதியின் சகோதரி மகாபலிபுரத்தில் வசித்து வருவதாகவும், அவர் குறைந்த விலைக்கு வீட்டுமனை வாங்கி விற்பதாகவும், நீங்கள் குறைந்த விலைக்கு தற்போது வீட்டுமனை வாங்கினால், பிறகு அதிக விலை போகும் என்றார்.
உடனே அவர் சண்முக ஆனந்த்தின் மனைவி ரேவதியின் வங்கி கணக்கில் ரூ.20 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட சண்முக ஆனந்த், அவருக்கு வீட்டுமனை வாங்கிக் கொடுக்காமல் நீண்ட நாட்களாக காலம் தாழ்த்தி வந்தார். மேலும் தொழிலில் கிடைத்த லாபத்தையும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கைது
இதனால் பபியோலா, தான் கொடுத்த ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் 24 பவுன் நகைகளை திருப்பி கொடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவர், பணத்தை திருப்பி கொடுக்க மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி பபியோலா, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சண்முக ஆனந்த், வீட்டுமனை வாங்கி தருவதாகவும், சாக்லெட் தொழிலை சேர்ந்து நடத்துவதாகவும் கூறி பபியோலாவிடம் ரூ.45 லட்சத்து 90 ஆயிரம் மற்றும் 24 பவுன் நகைகள் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சண்முக ஆனந்தை கைது செய்து பண்ருட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story