கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 34,380 டோஸ் வரத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் அதிகாரி தகவல்


கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 34,380 டோஸ் வரத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2021 10:50 PM IST (Updated: 28 Aug 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 34,380 டோஸ் வந்துள்ளதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தவீரமாக நடைபெற்று வருகிறது.

 அந்த வகையில் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 989 ஆண்கள், 4 லட்சத்து 2 ஆயிரத்து 339 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 116 பேர் என மொத்தம் 8 லட்சத்து 12 ஆயிரத்து 444 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதாவது 6 லட்சத்து 73 ஆயிரத்து 330 பேருக்கு முதல் தவணையும், 1 லட்சத்து 39 ஆயிரத்து 114 பேருக்கு இரண்டு தவணைகளும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடந்தது.

மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பு

இதற்கிடையே நேற்று சென்னையில் இருந்து கடலூருக்கு 5,880 டோஸ் கோவாக்சினும், 28 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டும் வந்தது. பின்னர் அவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 4,810 டோஸ் கோவாக்சினும், 860 டோஸ் கோவிஷீல்டும் இருப்பு இருந்தது. குறைந்தளவே இருப்பு இருந்ததால் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடந்தது.

சிறப்பு முகாம்

இந்த நிலையில் நேற்று கூடுதலாக மாவட்டத்திற்கு 5,880 டோஸ் கோவாக்சினும், 28 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டும் வந்துள்ளது. அதனால் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் மூலமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடையின்றி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்றார்.

Next Story