கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுப்பு


கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 28 Aug 2021 10:58 PM IST (Updated: 28 Aug 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.

திருப்புவனம்,
கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
அகழாய்வு
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனுடன் சேர்த்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி அகழாய்வில் தோண்டத் தோண்ட பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை இங்கு கிடைக்கும் பொருட்கள் மெய்பித்து காண்பிக்கின்றன. கடந்த 2 வாரத்திற்கு முன்பு சிவப்பு நிற பானை போல் தென் பட்டது. 
அந்த பானையின் கழுத்து, வாய்ப்பகுதி மட்டுமே வெளியே தெரிந்தது. மற்ற பகுதிகள் பூமிக்குள் புதைந்து இருந்தன. பானையின் வாய்ப்பகுதி சற்று தடிமனாக இருந்தது. வாய்ப்பகுதியில் மாலை அணிவித்தது போன்று சிறிய வளையங்களை கோர்த்து மண்ணால் அந்தக் காலத்திலேயே நேர்த்தியான அலங்காரம் செய்துள்ளது தெரியவந்தது. 
தானிய கொள்கலன்
பானை நல்ல சிவப்பு நிறமாக காட்சி அளித்தது. தொடர்ந்து சில வாரங்களாக அந்த சிவப்பு பானையை தொல்லியல் அலுவலர்கள் சிறிது சிறிதாக அகழாய்வு செய்து வந்தனர். முடிவில் 348 செ.மீட்டர் ஆழத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முழுமையான கொள்கலனாக வெளியில் தெரியவந்தது. தற்போது இதன் விளிம்பு 2 செ.மீட்டர் தடிமன் கொண்டதாக தெரிகிறது. கொள்கலன் விளிம்பின் உள்விட்டம் 30 செ.மீட்டர் ஆகவும் வெளிவிட்டம் 34 செ.மீட்டர் உள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் இந்த கொள்கலன் 60 செ.மீட்டர் உயரம் உள்ளதாக அளவிடப் பட்டு உள்ளது. 
டுவிட்டர்
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், நம்முன்னோர்கள் பழங்காலத்தில் வீடுகளில் நெல் மற்றும் தானியங்களை சேமித்து வைக்க பயன் படுத்தப்பட்ட தானிய கொள்கலன் என்றனர். தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் தளத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கொள்கலன் கிடைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

Next Story