கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் சிக்கியது; அலுவலர், ஆய்வாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் சிக்கியது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
சோதனை
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார் மற்றும் அலுவலக ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
குப்பை தொட்டியில் இருந்து...
இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை மற்றும் விசாரணை நேற்று அதிகாலை 3.45 மணிக்குத்தான் முடிவடைந்தது. சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி அறையின் அருகே உள்ள குப்பை தொட்டியில் இருந்து கத்தையாக கிடந்த ரூ.41 ஆயிரத்து 500-ம், அலுவகத்தின் தற்காலிக பணியாளர்கள் 2 பேரிடம் ரூ.24 ஆயிரமும் மற்றும் 4 இடைத்தரகர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சேர்ந்த 2 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 450-ம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 950-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் அலுவலகத்தின் கணக்கில் வராத பணம் என்பது தெரியவந்தது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் யாரையும் கைது செய்யவில்லை.
10 பேர் மீது வழக்கு
இருப்பினும் இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார், தற்காலிக பணியாளர்கள் சேகர், கண்ணுசாமி, இடைத்தரகர்கள் சேகர், முருகன், பாலகிருஷ்ணன், வேல்முருகன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிலையத்தை சேர்ந்த மதியழகன், சுந்தர்ராஜ் ஆகிய 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story