வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் நூதன முறையில் பணம் மோசடி


வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் நூதன முறையில் பணம் மோசடி
x
தினத்தந்தி 28 Aug 2021 7:48 PM GMT (Updated: 2021-08-29T01:18:26+05:30)

வேலை தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்தை  சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போனில் தொடர்புகொண்ட வாலிபர் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி பேசினார். அப்போது அவர், தற்போது கொரோனா காலம் என்பதால் நேரடியாக அழைத்து நேர்முகத்தேர்வு நடத்த முடியாது, எனவே செல்போன் மூலமாக நேர்முகத்தேர்வு நடத்தி வருகிறோம் என்று கூறினார். இதை நம்பி அந்த பெண் நேர்முகத்தேர்வுக்கு தயார் ஆனார். தொடர்ந்து செல்போனில் அதிகார தோரணையில் பேசிய அந்த வாலிபர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இறுதியில் அந்த வாலிபர் தனியார் வங்கிகளின் பெயரை கூறி அங்குதான் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

நீங்கள் வேறு வங்கியில் கணக்கு வைத்திருப்பதால் அதை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய அந்த இளம்பெண்ணும் தனது வங்கிக்கணக்கு விவரங்களை தெரிவித்து உள்ளார். அப்போது ஒருமுறை கடவு எண் வரும் என்று கூறி அதை அந்த பெண்ணிடம் கேட்டுப் பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி விட்டனர். ஆனால் குறிப்பிட்டபடி நீண்ட நாட்களாகியும் அந்த பெண்ணுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து அவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story