கர்நாடகத்தில் வாரத்தில் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா


கர்நாடகத்தில் வாரத்தில் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா
x
தினத்தந்தி 28 Aug 2021 7:59 PM GMT (Updated: 2021-08-29T01:29:01+05:30)

கர்நாடகத்தில் வாரத்தில் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் வாரத்தில் ஒரு நாள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கூடுதல் தடுப்பூசிகள்

கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் தினமும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் ஒரே மாதத்தில் 1½ கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். கர்நாடகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தினசரி 50 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

வாரத்தில் ஒரு நாள் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும். அன்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இந்த திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். பெங்களூருவில் மட்டும் 1 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவும் இடமாக பெங்களூரு உள்ளது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இங்கு அதிகளவில் வருகிறார்கள்.

குழந்தைகள் நல பிரிவு

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களில் குழந்தைகள் நல பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தலா 70 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அதனால் அந்த திட்ட பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் விவாதிப்பேன். பசவராஜ் பொம்மை நீர்ப்பாசன திட்டங்களில் ஆழமான அனுபவம் கொண்டவர்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story