மாணவி கூட்டு பலாத்கார வழக்கு; சிறுவன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது


மாணவி கூட்டு பலாத்கார வழக்கு; சிறுவன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2021 9:07 PM GMT (Updated: 28 Aug 2021 9:07 PM GMT)

மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் சிறுவன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்தார்.

மைசூரு: மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் சிறுவன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்தார். 

கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்

கர்நாடக மாநிலம் மைசூருவில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மும்பையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி கல்லூரி மாணவியும், அவரது காதலனும் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதிக்கு சென்றிருந்தனர். அங்கு வைத்து 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். 

அப்போது அந்தப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த 6 பேர் கும்பல், அங்கு வந்து காதல் ஜோடியை மிரட்டி ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் கல்லூரி மாணவியின் காதலனை தாக்கிய மர்மநபர்கள், மாணவிைய புதருக்குள் தூக்கி சென்று கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து கல்லூரி மாணவியும், அவரது காதலனும் அந்த வழியாக வந்த பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

போலீசார் தீவிர விசாரணை

மைசூருவில் நடந்த இந்த கூட்டு பலாத்கார சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடுமையாான தண்டனை வழங்க வேண்டும் என்று கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. மேலும் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தலைமையில் விசாரணையும் நடந்து வந்தது. தனிப்படை போலீசார் இந்த வழக்கை தீவிரமாக எடுத்து கொண்டு விசாரணைைய முடுக்கிவிட்டனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்களை வைத்து துப்புதுலக்கினர். 

5 பேர் கைது

இந்த வழக்கில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட மாணவி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் போலீசாருக்கு இந்த வழக்கு மிகவும் சவாலாக இருந்தது. பாதிக்கப்பட்ட காதல் ஜோடியுடன் படிக்கும் மாணவ-மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால், கற்பழிப்பில் ஈடுபட்டவர்கள் மது குடித்திருப்பதை போலீசார் உறுதிபடுத்தினர். 

இதனால் லலிதாதிரிபுரா பகுதியில் உள்ள மதுக்கடைகளின் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு மதுக்கடையின் கண்காணிப்பு கேமராவில் மாணவி கற்பழிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய துப்பு போலீசாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவன் 17 வயது சிறுவன் ஆவான். கைதான 5 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தனிப்படை போலீசார் திருப்பூருக்கு சென்று 5 பேரையும் கைது செய்துள்ளனர். 
 
தமிழகத்தை சேர்ந்தவர்கள்

இதுகுறித்து மைசூருவில் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 
மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவன் 17 வயது சிறுவன். கைதான 5 பேரில் ஒருவர் ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்தவர். சிறுவன் உள்பட 4 பேரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா சேவூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். 

மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர் விவரங்களை பொதுவௌியில் தெரிவிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், கைதானவர்களின் பெயர் விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. கைதான 5 பேரையும் கர்நாடகம் அழைத்து வர ஏற்பாடுகள் நடக்கிறது. 

அவர்கள் 5 பேரும், கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி அவர்கள் 5 பேரும் தமிழ்நாடு ஈரோடு, கோயம்புத்தூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து மைசூரு பண்டிபாளையா மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு வந்துள்ளனர். 

3 பேர் மீது குற்றவழக்குகள்

அவ்வாறு மைசூருவுக்கு வந்த 5 பேரும், கடந்த 24-ந்தேதி லலிதாதிரிபுரா பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவி மற்றும் அவருடைய காதலனை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியின் காதலனை கல்லால் தாக்கி உள்ளனர். மேலும் கல்லூரி மாணவியை கூட்டாக கற்பழித்து உள்ளனர். 
பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைதானவர்களில் 3 பேர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. அதில் ஒருவர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று வந்தவர் ஆவார். அதாவது தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் காதலியின் தந்தையை அவர் கொலை செய்திருந்தார். அந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 
இவ்வாறு அவர் கூறினார். 

போலீசாருக்கு ரூ.5 லட்சம் சன்மானம்

மைசூருவில் மராட்டிய மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீசாா் கைது செய்துள்ளனர். அவர்களை துரிதமாக செயல்பட்டு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்தார்.

இதேபோல, மைசூரு நகைக்கடை கொள்ளை-கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படைக்கும் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.  

Next Story