சரக்கு ஆட்டோவில் கடத்திய 102 கிலோ கஞ்சா பறிமுதல்
விசாகப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த 102 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிக்கமகளூரு: விசாகப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த 102 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாகன சோதனை
விசாகப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரக்ஷித் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
சரக்கு ஆட்டோவில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர்.
கஞ்சா கடத்தல்
இதையடுத்து போலீசார், சரக்கு ஆட்டோவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது. இதுகுறித்து சரக்கு ஆட்டோவில் இருந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 26), சிக்கமகளூருவை சேர்ந்த ஆதிக் (32), மற்றொரு இஸ்மாயில் (27), மண்டியாவை சோ்ந்த கவுசிக் மற்றும் ஒரு பெண் ஆகிய 5 பேர் என்பதும், அவர்கள் விசாகசப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள், சிக்கமகளூரு, உடுப்பி, மங்களூரு, சிவமொக்கா ஆகிய பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு அதனை விற்க முயன்றதும் தெரியவந்தது.
5 பேர் கைது
இதையடுத்து போலீசார் பெண் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 102 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story