விமானத்தில் கடத்திய ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல்; கேரளாவை சேர்ந்தவர் கைது


விமானத்தில் கடத்திய ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல்; கேரளாவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 2:38 AM IST (Updated: 29 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

மங்களூரு: துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். 

மங்களூரு விமான நிலையம்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் நேற்று, துபாயில் இருந்து மங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 

கேரள பயணி கைது

அப்போது, ஒரு பயணியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், போலீசார் அந்த நபரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அந்த நபர் தனது உடைமையில் வைத்திருந்த ஸ்கேட்டிங் பலகையில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான 335 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அந்த நபரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் பஜ்பே  போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் முலியார் பகுதியை சேர்ந்த முகமது நவாஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story