குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2021 3:16 AM IST (Updated: 29 Aug 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி:
‘தென்னகத்தின் ஸ்பா’ என்றழைக்கப்படும் குற்றாலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2 ஆண்டுகளாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனினும் கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வில் சில நாட்கள் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தாலும், பின்னர் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இந்த ஆண்டும் தொடர்கிறது. இந்த ஆண்டும் சீசன் காலத்தில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து குளுமையான சூழல் நிலவியது. தற்போது சீசன் முடியும் தருவாயிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், குற்றாலம் பகுதியிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனினும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும், வார விடுமுறை நாட்களில் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால், அருவிக்கரைகளில் இருந்து தொலைவிலேயே போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளை பார்க்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
எனவே, குற்றாலத்தில் சீசன் முடியும் தருவாயிலாவது அருவிகளில் குளிக்க அனுமதிக்க அளிக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நேற்று குற்றாலத்துக்கு வந்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணி அசோக்குமார் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்பட்டன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, குற்றாலம் அருவிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியுடன் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். குற்றாலத்தில் சீசன் முடியும் தருவாயிலும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தால், இங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 573 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து 1,482 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 87.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,204 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 87 அடியில் இருந்து 90.12 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 10 கன அடியாகவும், வெளியேற்றம் 150 கன அடியாகவும் உள்ளது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -4, மணிமுத்தாறு -1, கருப்பாநதி -3, குண்டாறு -4, அடவிநயினார் -20, செங்கோட்டை -1, தென்காசி -5, சிவகிரி -1.

Next Story