சேலம் அருகே பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு காரில் சிறுவன் கடத்தல்- ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர்


சேலம் அருகே பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு காரில் சிறுவன் கடத்தல்- ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 29 Aug 2021 4:44 AM IST (Updated: 29 Aug 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு காரில் கடத்தப்பட்ட சிறுவனை ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார் அதிரடியாக மீட்டனர்.

சேலம்:
சேலம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு காரில் கடத்தப்பட்ட சிறுவனை ஒரு வாரத்திற்கு பிறகு போலீசார் அதிரடியாக மீட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
14 வயது சிறுவன்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணியூர் நச்சுவாயனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 40). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு சபரி (14) என்ற மகனும், நந்தினி (13) என்ற மகளும் உள்ளனர். பழனிசாமியின் மனைவி லதா, பஞ்சுகாளிப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 22-ந் தேதி மதியம் வீட்டிற்கு அருகில் விளையாட சென்ற சிறுவன் சபரி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மறுநாள் 23-ந் தேதி தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் பழனிசாமி, தனது மகனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்
இதனிடையே, கடந்த 26-ந் தேதி ஜவுளிக்கடை நடத்தி வரும் சரவணனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சிறுவன் சபரியை  காரில் கடத்தி சென்றுவிட்டதாகவும், ரூ.50 லட்சம் கொடுத்தால் அவனை திருப்பி அனுப்பி விடுவதாகவும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சரவணன், இது குறித்த விவரத்தை சிறுவனின் தந்தை பழனிசாமியிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து சரவணனுக்கு வந்த செல்போன் அழைப்பை வைத்து தொளசம்பட்டி போலீசார் உடனடியாக கடத்தப்பட்ட சிறுவனை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மேலும் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார்.
சேலத்தில் மீட்பு
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி சேலம் குகை பகுதியை சேர்ந்த பட்டறை உரிமையாளர் செல்வகுமார் (39) என்பவரது வீட்டில் சிறுவன் அடைத்து வைத்திருந்ததை ஒரு வாரத்திற்கு பிறகு கண்டுபிடித்து நேற்று அதிரடியாக மீட்டனர். குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க சிறுவனை அவர் கடத்தியது தெரியவந்தது.
மேலும் கடந்த 7 நாட்களாக சிறுவனின் கை, கால்களை கட்டிபோட்டும், உணவு கொடுக்காமலும் தனி அறையில் அடைத்து வைத்திருந்ததால் சிகிச்சைக்காக அவன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
தொடர்ந்து சிறுவனை கடத்திய வழக்கில் செல்வகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? சேலத்தை சேர்ந்த செல்வகுமார், தொளசம்பட்டிக்கு சென்று அங்கு விளையாடிய சிறுவன் சபரியை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story