காரில் வக்கீல் என போலி ‘ஸ்டிக்கர்’ ஒட்டி நூதனமாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்ற 2 பேர் கைது


காரில் வக்கீல் என போலி ‘ஸ்டிக்கர்’ ஒட்டி நூதனமாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 2:38 PM IST (Updated: 29 Aug 2021 2:38 PM IST)
t-max-icont-min-icon

காரில் வக்கீல் என போலி ‘ஸ்டிக்கர்’ ஒட்டி நூதனமாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். உடந்தையாக இருந்த பெண் வியாபாரியும் சிக்கினார்.

பெண் கஞ்சா வியாபாரி
சென்னை காசிமேடு சூரியநாராயணன் சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நோட்டமிட்டதில், கஞ்சா விற்று கொண்டிருந்த மணலி புதுநகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பார்வதி (வயது 32) என்பவரை கையும், களவுமாக பிடித்து விசாரித் தனர்.அப்போது அவர் செங்குன்றம் பகுதியில் இருந்து கஞ்சா மொத்தமாக வாங்கி வந்து விற்றதாக அளித்த தகவலின் பேரில், காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் பெண் கஞ்சா வியாபாரி பார்வதியுடன் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர்.அப்போது பார்வதியின் செல்போன் மூலம் கஞ்சா மொத்த வியாபாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

வக்கீல் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி...
சிறிது நேரத்தில் வக்கீல் என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டி காரில் வந்த வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (28) நரேஷ் குமார் (27) ஆகிய 2 இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர்.பின்னர் அவர்கள் வந்த காரை சோதனையிட்டபோது, அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக 2 பேரையும் கைது செய்து விசாரித்ததில், இருவரும் காரை வாடகைக்கு எடுத்து அதில் வக்கீல் என்று ‘ஸ்டிக்கர்’ ஒட்டி ஆந்திராவுக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும், 2 பேர் மீதும் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்த பெண் வியாபாரி உள்பட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story