பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அங்கு 2-வது சீசனுக்காக புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி
கர்நாடகா தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அங்கு 2-வது சீசனுக்காக புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
2 லட்சம் மலர் செடிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா உள்ளது. கொரோனா பரவலால் மூடப்பட்டு, கடந்த 23-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. வருகிற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நீலகிரியில் 2-வது சீசன் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபாதை ஓரங்களில் உள்ள மலர் பாத்திகள் இயற்கை உரமிட்டு தயார் செய்யப்பட்டு உள்ளது.
சால்வியா, டேலியா, பிகோனியா, பிளாக்ஸ், மேரிகோல்டு, ஜெரேனியம், கேலண்டுலா உள்பட 30 ரகங்களை சேர்ந்த 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அலங்கார வடிவங்கள்
சக்குலன்ட் என்று அழைக்கப்படும் அழகு தாவர செடிகளின் 20 ரகங்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. சிக்கிம் மாநிலத்தில் இருந்து ஆர்க்கிட் வகையை சேர்ந்த 20 ரகங்கள் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நர்சரியில் ஆர்க்கிட், பிகோனியா, சைக்ளோமன், ரெனன்குலஸ் உள்பட 50-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த ஒரு லட்சம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். ஊரடங்குக்கு பின்னர் தற்போது சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளதால், 2-வது சீசனுக்காக பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story