சுற்றுலா தலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை


சுற்றுலா தலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 29 Aug 2021 2:39 PM IST (Updated: 29 Aug 2021 2:39 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூங்காக்கள் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலை பூங்காக்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 படகு இல்லங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

அங்கு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்து வருகிறது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து பலர் வந்து செல்வதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

கொரோனா பரிசோதனை

இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா தலங்கள், தங்கும் விடுதிகள், முக்கிய வீதிகளில் உள்ள கடை வியாபாரிகளுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பாதிப்பு யாருக்கேனும் ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.

இந்த நிலையில் நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள், புகைப்பட கலைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுகாதார குழுவினர் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ரோஜா பூங்கா, படகு இல்லத்தில் பணிபுரிபவர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுழற்சி முறை

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளா மாநிலத்தில் தொற்று பரவல் அதிகமாக இருக்கிறது. மேலும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருகின்றனர்.

இதனால் தொற்று பரவும் நிலை உள்ளது. தற்போது சுற்றுலா தலங்கள், ஓட்டல்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story