மார்க்கெட் வியாபாரிகள், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


மார்க்கெட் வியாபாரிகள், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2021 2:39 PM IST (Updated: 29 Aug 2021 2:39 PM IST)
t-max-icont-min-icon

மார்க்கெட் வியாபாரிகள், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சியை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஏ.டி.சி.திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். தேசிய இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், கடைகளுக்கு வைத்த சீலை அகற்றி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீல் வைத்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் பா.ஜனதா தேசிய இளைஞர் அணி துணை தலைவர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறும்போது, ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டதால் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது பாதிக்கப்பட்டு உள்ளது. வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா காலத்தில் மத்திய அரசு குறு, சிறு வியாபாரிகளுக்கு சலுகைகளை அறிவித்து, இதுவரை ரூ.8 லட்சம் கோடி சென்றடைந்து இருக்கிறது. எனவே, வியாபாரிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.


Next Story