வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு
குன்னூரில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர்
குன்னூரில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சின்ன கரும்பாலம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 27). இவர் சம்பவத்தன்று குன்னூரில் உள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 2 பேர் வந்தனர். அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத சமயத்தில் திடீரென கோபாலகிருஷ்ணனை சரமாரியாக கைகளால் தாக்கினர்.
பின்னர் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் மேல்குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறையில் அடைப்பு
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கோபாலகிருஷ்ணனை தாக்கி செல்போனை பறித்து சென்றது குன்னூர் உமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்த இளவரசன்(31), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யுவராஜ்(20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story