புதுச்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி அண்ணன்-தம்பி பலி டிரைவர் கைது
புதுச்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி அண்ணன்-தம்பி பலி டிரைவர் கைது
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி அண்ணன், தம்பி பலியானார்கள். இதையடுத்து லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரத்தை அடுத்த தெற்குபட்டியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன்கள் ராமசாமி (வயது 38), ரங்கநாதன் (34). பெயிண்டர்களான இவர்கள் நேற்று காலை வீட்டில் இருந்து நாமக்கல்லில் உள்ள தனியார் கார் விற்பனை நிறுவனத்தில் பெயிண்டிங் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை ரங்கநாதன் ஓட்டினார். ராமசாமி பின்னால் அமர்ந்திருந்தார்.
புதுச்சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றது. அப்போது, சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி பூச்சி மருந்து லோடுடன் சென்ற கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு தறிகெட்டு ஓடி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
அண்ணன், தம்பி பலி
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராமசாமி மற்றும் ரங்கநாதன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் பலியான ராமசாமி மற்றும் ரங்கநாதனின் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே கன்டெய்னர் லாரி டிரைவர் தமிழழகனை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து திருச்சிக்கு பூச்சி மருந்து லோடுடன் கன்டெய்னர் லாரி சென்றது தெரியவந்தது. மேலும் லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. விபத்தில் பலியான ராமசாமிக்கு தேவி என்ற மனைவியும், ரங்கநாதனுக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story