திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு வீடுகள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆத்துப்பக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் எட்டியம்மாள் (வயது 85), இவரது மகள் முனியம்மாள் (55). இவர்கள் இருவரும் கணவரை இழந்தவர்கள். இவர்கள் ஆத்துப்பாக்கம் கிராம எல்லையில் பெரியபாளையம் மெயின் ரோடு ஒட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஓடு வீடு மற்றும் தளம் போட்ட வீடு கட்டி உள்ளனர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதால் அவற்றை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வீடுகள் அகற்றப்படவில்லை.இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
தீக்குளிக்க முயற்சி
இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சந்திரசேகர், சாலை ஆய்வாளர் திருமால், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் ஆகியோர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முனியம்மாள் தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதற்குள் அங்கு இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த எட்டியம்மாளை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வேறொரு இடத்துக்கு கொண்டு சென்றனர். கிராம பிரமுகர்கள் விரைந்து வந்து ஒரு வாரம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
Related Tags :
Next Story