கொரோனா தடுப்பு வழிமுறைகளை பள்ளிக்கூடங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பள்ளிக்கூடங்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
தூத்துக்குடி:
பள்ளிக்கூடங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தூத்துக்குடியில் நேற்று நடந்த தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழக அரசு நிலையான வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சின்னராஜ், வசந்தா, முனியசாமி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் அழகுராஜா மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தனிமைப்படுத்த அறை வசதி
கூட்டத்தில் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 50 சதவீதம் மட்டும சுழற்சி முறையில் மாணவர்களுடன் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு வகுப்பில் 20 பேர் மட்டுமே அமர வைக்க வேண்டும்.
இடவசதி இருந்தால் கூடுதல் மாணவர்களை அமர வைக்கலாம். கூடுதல் கட்டிடங்கள் இல்லையெனில் சுழற்சி முறையில் வகுப்புகளை வேறு நாட்களில் நடத்துவதுடன் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்க வேண்டும். அதே போல் ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும்.
விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைனில் படிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் வெப்பநிலை பரிசோதனை, முககவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்து அடிக்கடி சுத்தம் செய்தல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். விளையாட்டு, இறைவணக்க கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.
மாணவர்களின் உடல், மனநலனை சோதனை செய்ய மருத்துவர் அல்லது செவிலியர் பள்ளியில் இருக்க வேண்டும்.
அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஏதுவாக தனி அறை வசதி இருக்க வேண்டும் உள்ளிட்ட அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story