திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை


திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 29 Aug 2021 1:10 PM GMT (Updated: 2021-08-29T18:40:52+05:30)

திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் மர்ம நபர்கள் 20 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் என்ஜினீயர் வீட்டில் மர்ம நபர்கள் 20 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். 
கதவின் தாழ்ப்பாள் உடைப்பு

திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல்நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் கார் ெதாழிற்சாலையில் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். 

பாலமுருகனின் மனைவி தீபா, குழந்தை மற்றும் அவரது தந்தை சிவானந்தம், தாய் ராஜேஸ்வரி ஆகியோர் திருவண்ணாமலையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேத்துப்பட்டு அருகில் நம்பேடு கிராமத்தில் நிலம் உள்ளது.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலமுருகனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் நம்பேடு கிராமத்துக்கு வந்தனர். பாலமுருகனின் மனைவி தீபா அவரது குழந்தையோடு போளூர் அருகில் உள்ள அவரின் தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளார். 

நேற்று காலை தீபா தனது சகோதரனுடன் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் தாழ்ப்பாள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

போலீஸ் விசாரணை

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோக்களில் இருந்த 20 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 

அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேரித்தனர். 

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story