தூத்துக்குடியில் ஒரே நாளில் 13 ரவுடிகள் மீது நடவடிக்கை போலீசார் அதிரடி


தூத்துக்குடியில் ஒரே நாளில் 13 ரவுடிகள் மீது நடவடிக்கை போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 29 Aug 2021 7:14 PM IST (Updated: 29 Aug 2021 7:14 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 13 ரவுடிகள் மீது நடவடிக்கை போலீசார் அதிரடி

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13 ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
போலீசார் சோதனை
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்தந்த உட்கோட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 95 தங்கும் விடுதிகளில் சோதனை செய்யப்பட்டது. 2 ஆயிரம் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 22 பேர் உட்பட மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக ஆயிரத்து 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 
திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் 55 பேர் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 72 பேர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்யப்பட்டது. 
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஏ.டி.எம். மையங்கள், நகைக்கடைகள் உட்பட 370 முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டது.
ரவுடிகள் மீது நடவடிக்கை
இது தவிர 13 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
மேலும் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் உட்பட சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 30 பேர் கைது செய்யப்பட்டு 376 மதுபாட்டில்களும் 250 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் உட்பட பழைய வழக்குகளில் கைதாகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான அகரத்தைச் சேர்ந்த பத்திரகாளி மகன் இசக்கிமுத்து (22), தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த காமாட்சி மகன் அய்யாச்சாமி (53), நடுக்கூட்டுடன் காட்டைச் சேர்ந்த லெட்சுமணப்பெருமாள் மகன் நாகராஜ் (23), அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன்பாரதி (20) உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story