புதுச்சேரியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புதுச்சேரியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 29 Aug 2021 9:17 PM IST (Updated: 29 Aug 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் விடுமுறை நாளான நேற்று வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

புதுச்சேரி, ஆக.
புதுச்சேரியில் விடுமுறை நாளான நேற்று வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு சவாரி  செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரிக்கு சுற்றுலாவுக்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நேற்று வார இறுதிநாள் என்பதால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. ஓட்டல்கள், கடைகளில் வியாபாரம் அமோகமாக நடந்தது.
சுற்றுலா   இடங்களான கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர்    கோவில், அரவிந்தர் ஆசிரமம் பகுதியில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக  காணப்பட்டது. கடற்கரை  சாலையில் தலைமை செயலகத்தில் இருந்து பழைய துறைமுக பாலம் வரையும் செயற்கை மணல் பரப்பு உருவாகி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். சிலர் தங்கள் குடும்பத்துடன்  கடலில் இறங்கி கால்களை நனைத்து விளையாடினர். 
படகு குழாம்
கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நோணாங்குப்பம் படகுகுழாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிமாநில சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்து நின்று சுண்ணாம்பாற்றில் படகு சவரி செய்து பாரடைஸ் பீச்சுக்கு சென்றனர்.
புதுச்சேரி   ஒயிட் டவுன் பகுதியில் பல இடங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். புதுச்சேரி நகர பகுதியில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா  வந்தன.   இதனால் நகரின் முக்கிய வீதிகளான அண்ணா சாலை, நேருவீதி, புஸ்சி வீதியில் அடிக்கடி போக்குவரத்து     நெரிசல் ஏற்பட்டதை காணமுடிந்தது.
சண்டே மார்க்கெட்
புதுச்சேரியில் நேற்று சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் பொதுமக்கள் அதிகம் குவிந்தனர். புதுச்சேரியில் வருகிற 1-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்க இருப்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் சூழல் நிலவியது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
____

Next Story