நிபந்தனை இன்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நிபந்தனை இன்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நிபந்தனை இன்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன
இந்த ஆண்டு கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது. கொரடாச்சேரி ஒன்றியம் பெரும்புகழூர் ஊராட்சியில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளன.
தற்போது சம்பா சாகுபடிக்கான முதல்கட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதையடுத்து கொரடாச்சேரி அருகே முகந்தனூர், திருமதிகுன்னம், கமலாபுரம், கீரங்குடி, வண்டாம்பாளை ஆகிய ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது வயல்களை டிராக்டர் மூலம் உழவு செய்து விதைகளை தெளித்து வருகின்றனர். மேலும் சில விவசாயிகள் நேரடி விதைப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் கடன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளுக்கு ரூ.2,900 கோடியும், கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனை இன்றி கடன்
தற்போது சம்பா சாகுபடி பணிகளுக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பழைய கடனை கட்டினால் தான் புதிய கடன் வழங்கப்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நிபந்தனை இன்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும். கஜா புயல் காலத்தில் வாங்கிய விவசாய கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். தட்டுப்பாடின்றி விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story