மந்தாரக்குப்பம் அருகே வீட்டு ஓட்டை பிரித்து கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேர் கைது


மந்தாரக்குப்பம் அருகே வீட்டு ஓட்டை பிரித்து கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 10:07 PM IST (Updated: 29 Aug 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் அருகே வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி நகையை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அருகே உள்ள கீழ்பாதி கிராமம் புது         நகரை சேர்ந்தவர்  சரண்ராஜ். தொழிலாளி. கடந்த 25-ந்தேதி இவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை. பின்னர்                மதியம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காக வந்தார்.

அப்போது அவரது வீட்டு மேற்கூரையில்  இருந்த ஓடுகள் பிரித்து எடுக்கப்பட்டு இருந்தது. மேலும்  பீரோ திறந்த நிலையில் அங்கிருந்த  10½ பவுன் நகையை காணவில்லை. மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. 

2 பேர் சிக்கினர்

இதுகுறித்து அவர் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். 

 இதில், சரண்ராஜியின் வீட்டுக்கு அருகருகே வசிக்கும்  வசந்தகுமார் என்பவரது மகன் சக்கரவர்த்தி(வயது 26), சம்பத்குமார் மனைவி விஜயலட்சுமி(37) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 


இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தான் சரண்ராஜ் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. 

 அதாவது, விஜயலட்சுமி அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணிக்க, சக்கரவர்த்தி, சரண்ராஜியின் வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி நகையை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.  இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.


Next Story