தேன்கனிக்கோட்டை அருகே கர்நாடக எல்லையில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
தேன்கனிக்கோட்டை அருகே கர்நாடக எல்லையில் பழிக்கு, பழியாக ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிபெண்டா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 32). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கர்நாடக மாநில எல்லையான கனகபுரா அருகே உன்சனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் மதுபான கடைக்கு மதுகுடிக்க சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் 6 பேர் சங்கரை மதுபான கடை அருகே அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து உயிரிழந்தார்.
பின்னர் அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கர்நாடக மாநில போலீசார் விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
அப்போது உளிபண்டா கிராமத்தை சேர்ந்த ஒபேகவுடு என்பவர் நில பிரச்சினை காரணமாக கடந்த 16.12.2016 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது உறவினரான சென்னகிருஷ்ணன் (30) கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 1.4.2021 அன்று டிராக்டரை மோத விட்டு, பாறாங்கல்லை தலையில் போட்டு கொலை செய்தனர்.
இது தொடர்பாக ஒபேகவுடுவின் மகன்கள் சங்கர், அவரது தம்பிகள் கணேசன், முருகேஷ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதனால் சென்னகிருஷ்ணன் கொலைக்கு, பழிக்கு பழியாக சங்கர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா தலைமையில் போலீசார் கொலை நடந்த உன்சனஹள்ளிக்கு சென்று அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story