மண்சரிவில் சிக்கிய 2 தொழிலாளர்கள் மீட்பு
குன்னூரில் கட்டுமான பணியின்போது மண்சரிவில் சிக்கிய 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
குன்னூர்,
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கட்டிட வரன்முறை சட்டம் அமலில் உள்ளது. இங்கு நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. மேலும் பொக்லைன் எந்திரம் கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல், ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்றவற்றுக்கு தடை உள்ளது. அவசிய தேவையென்றால் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். எனினும் இதை மீறி குன்னூர் பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சி அலுவலக பகுதியில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதைக்கு அருகில் தனியார் மூலம் வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
மண் சரிந்து 2 பேர் காயம்
தற்போது குன்னூர் பகுதியில் மழை பெய்து வருவதால், நிலப்பகுதி சற்று ஈரமாக காணப்படுகிறது. இதுபோன்ற நிலையில் நேற்று அந்த கட்டுமான இடத்தில் கான்கிரீட் தூண் அமைப்பதற்காக மண்ணை அகற்றும் பணி நடந்தது.
அப்போது மதியம் 2.45 மணியளவில் திடீரென ஒருபுறத்தில் இருந்து மொத்தமாக மண் சரிந்து விழுந்தது. இதில் ராகுல்(வயது 26), ரசீது(29) ஆகிய 2 வடமாநில தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். மண்ணுக்குள் புதைந்து காயம் அடைந்த அவர்களை சக தொழிலாளர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். தொடர்ந்து குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story