ஆலங்குடி அருகே நண்பர்களுக்கு இடையே மோதல்; வாலிபர் வெட்டிக்கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை


ஆலங்குடி அருகே நண்பர்களுக்கு இடையே மோதல்;  வாலிபர் வெட்டிக்கொலை 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2021 10:49 PM IST (Updated: 29 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி அருகே நண்பர்ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குடி
நண்பர்களுடன் மது அருந்தினார்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லு குண்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மகன் செல்வகணபதி என்ற விஜய் (வயது 24).  டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கஞ்சாவும் பயன்படுத்தி உள்ளனர். பின்னர் கல்லுகுண்டுக்கரை குளத்தங்கரையில் உள்ள தண்ணீர் தொட்டி பாலக்கட்டையில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். 
அப்போது, விஜய்க்கும், மேல சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில் ராஜா என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் அங்கு நின்றிருந்த செந்தில் ராஜாவின் தம்பி சின்னமுத்துவை விஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் தலையில் தாக்கினர். பிளேடு மதியையும் அவர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
வாலிபர் வெட்டிக்கொலை
இதற்கிடையே விஜயை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து கலிபுல்லா நகருக்கு அழைத்து சென்றனர்.  அங்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த விஜயை கலிபுல்லா நகர் தொடக்க பள்ளிக்கு முன்பு அரிவாளால் சிலர் வெட்டி உள்ளனர். இதில் விஜய் ரத்தம் சொட்ட, சொட்ட காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூறியவாறு சாலையில் ஓடி வந்து விழுந்தார். சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதைப்பார்த்து ஆலங்குடி போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.  பின்னர் விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மேலும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விஜய் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு 
இதுகுறித்து விஜயின் தாய் திலகவதி ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சசி என்ற செந்தில் ராஜா, தபசு முருகன், முருகேசன், ராமு, பசுபதி மற்றும் சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.  மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

Next Story