ஆசிரியரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி ரூ.24 ஆயிரம் மோசடி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் விசாரணை
புதுக்கோட்டையில் ஆசிரியரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி ரூ.24 ஆயிரம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை
போலி முகநூல் கணக்கு
சமூக வலைத்தளமான முகநூலை (பேஸ்புக்) பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒருவரது பெயரை வைத்து மர்மநபர்கள் போலியாக ஒரு கணக்கை தொடங்கி, அவர்களது நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு `பிரண்ட் ரெகியூஸ்ட்' கொடுத்து நண்பராகி அவர்களுக்கு ஹாய், நலமா, எனக்கு உடனடியாக அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. கூகுள் பே அல்லது ஆன்-லைன் வழியாக பணம் அனுப்பவும் என மெசேஜ்ரில் தகவல் அனுப்பி விடுகின்றனர்.
இதனை பார்த்து நமது நண்பருக்கு ஏதோ அவசர தேவைக்காக பணம் தேவைப்படுகிறதோ? என கருதி சிலர் பணத்தை அனுப்பி விடுகின்றனர். பணத்தை அனுப்பிய பின் சம்பந்தப்பட்டவரிடம் அவர்கள் தொடர்பு கொள்ளும் போது, மர்மநபர்கள் போலி கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவரும் போது அதிர்ச்சியடைகின்றனர். இதுபோன்ற இணைய வழி மோசடி சம்பவம் அதிகரித்துள்ளதால் போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்
இதேபோல முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்களும் தங்களது பெயரில் முகநூல் மூலமாக யாரும் பணம் கேட்டால் நண்பர்கள் கொடுத்துவிட வேண்டாம் எனவும், தங்களது பெயரில் இருக்கும் தான் பயன்படுத்தும் முகநூல் கணக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இதுபோன்ற பண உதவி கேட்டு மெசேஜ் வந்தால் பணம் அனுப்புவதில்லை. தமிழகத்தை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகளின் பெயர்களிலே போலி முகநூல் கணக்கை மர்மநபர்கள் தொடங்கி பணம் கேட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியரின் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி மர்மநபர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பிலுகுடி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 42). இவர், மணமேல்குடி அருகே பொன்னகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
ரூ.24 ஆயிரம் மோசடி
இந்த நிலையில் ஆசிரியர் பழனி பயன்படுத்தி வரும் முகநூலில் இருந்து விவரங்களை எடுத்து அவரது பெயரில் போலி முகநூல் கணக்கை மர்மநபர்கள் தொடங்கி உள்ளனர். மேலும் பழனியின் நண்பர்களுக்கு முகநூல் வழியாக பணம் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளனர். இதில் 2 பேர் கூகுள் பே மூலம் பணம் அனுப்பி உள்ளனர். மொத்தம் ரூ.24 ஆயிரம் அனுப்பியிருக்கின்றனர்.
இது தொடர்பாக பழனியிடம் பணம் அனுப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது தான் பணம் எதுவும் கேட்கவில்லை எனவும், தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மர்மநபர்கள் இந்த கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பழனி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முகநூல் நிர்வாகத்திற்கும் மெயில் அனுப்பி சம்பந்தப்பட்ட முகநூல் முகவரியின் விவரத்தை கேட்டுள்ளனர்.
Related Tags :
Next Story