விழுப்புரம் பகுதியில் கம்பு விளைச்சல் அமோகம்


விழுப்புரம் பகுதியில் கம்பு விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 29 Aug 2021 5:27 PM GMT (Updated: 29 Aug 2021 5:27 PM GMT)

விழுப்புரம் பகுதியில் கம்பு அமோகமாக விளைச்சல் ஆகியுள்ளது.

விழுப்புரம், 

சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து நிறைந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும். கம்பு குறைந்த நீர்வளம், மண்வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக்கூடியவை.

மேலும் உணவுத்தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப்பொருட்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்து குறைபாட்டை போக்கவும் கம்பு மிகச்சிறந்த தானியமாகும்.

கம்பு விளைச்சல் அமோகம்

இத்தகைய சத்து மிகுந்த கம்பு பயிரை விழுப்புரம் அருகே கல்பட்டு, நத்தமேடு, தெளி, சிறுவாக்கூர், மாம்பழப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மானாவரியாக விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கம்பு நன்கு செழித்து வளர்ந்து கதிர்களுடன் அறுவடைக்கு தயார் நிலையில் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளதால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

உரிய விலை வேண்டும்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மானாவரியில் கம்பு சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையை பொறுத்து விதை அளவு மாறுபடும். விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் உரத்தை கலந்து பின்பு விதைக்க வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். கம்பு விதைத்த 2-வது வாரத்தில் களையெடுக்கும் சமயத்தில் பயிருக்கு பயிர் 15 செ.மீட்டர் இடைவெளி இருப்பதுபோல் களை எடுக்க வேண்டும். பொதுவாக 15-வது 30-வது நாளில் களையெடுக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மேலும் கம்பு பயிர் பாதிப்படையாமல் பாதுகாக்கும் வகையில் குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீத வேப்பங்கொட்டைச்சாற்றை தெளிக்க வேண்டும். அதேபோல் அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப் உரங்களை தெளிக்க வேண்டும். கம்பு இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தை தரும், தானியங்களும் கடினமாகும். அப்போது கதிர்களை தனியாக அறுவடை செய்யலாம். இந்த முறையில் கம்பை பயிரிடுவதால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். எனவே எங்களை போன்ற கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் கம்புக்கு உரிய விலை கிடைக்கச்செய்ய வேளாண்மை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Next Story