ஆற்காடு அருகே தாயை திட்டிய மேஸ்திரி குத்தி கொலை. தம்பிக்கு வலைவீச்சு
ஆற்காடு அருகே தாயை திட்டியதால், கட்டிட மேஸ்திரியை குத்தி கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே தாயை திட்டியதால், கட்டிட மேஸ்திரியை குத்தி கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
தாயை திட்டினார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்தவர் தேவநாராயணன் (வயது 41). கட்டிட மேஸ்திரி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் தேவநாராயணன் குடித்துவிட்டு தனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த தேவநாராயணனின் தம்பி கணபதி தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
குத்தி கொலை
இதில் ஆத்திரம் அடைந்த கணபதி தனது அண்ணன் தேவநாராயணனை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் தேவநாராயணன் உடலில் 9 இடங்களில் கத்தி குத்து விழுந்துள்ளது.
இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த தேவநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணபதியை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story