பூம்புகாரில் படகுகளை நிறுத்திச்சென்ற புதுச்சேரி மீனவர்கள்
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பூம்புகார் பகுதியில் புதுச்சேரி மாநில மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை நிறுத்தி உள்ளனர். அந்த விசைப்படகுகளை அப்புறப்படுத்தக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.
திருவெண்காடு:
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பூம்புகார் பகுதியில் புதுச்சேரி மாநில மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை நிறுத்தி உள்ளனர். அந்த விசைப்படகுகளை அப்புறப்படுத்தக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மீனவர்கள் மோதல்
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்களுக்கும், நல்லவாடு மீனவர்களுக்கும் இடையே சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதில் பிரச்சினை நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் நடுக்கடலில் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் காயம் அடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
13 விசைப்படகுகள்
இந்த நிலையில் சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடித்து வரும் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த 13 விசைப்படகுகள் நேற்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்ட கடல் எல்லைக்கு வந்தன. இதில் 4 விசைப்படகுகளை பழையாறு தற்காஸ் பகுதியிலும், 9 விசைப்படகுகளை பூம்புகார் துறைமுகத்திலும் படகின் உரிமையாளர்கள் மற்றும் சில மீனவர்கள் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெர்ஜீனியா, பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், மீன்வளத்துறை ஆய்வாளர் திலீப் பிலமெண்ட், மேற்பார்வையாளர் தீனதயாளன் ஆகியோர் தற்காஸ் மற்றும் பூம்புகார் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
நோட்டீஸ் ஒட்டினர்
பின்னர் மீன்வளத்துறை சார்பில் விசைப்படகுகளில் நோட்டீஸ் ஒட்டினர். அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிக்கும் விசைப்படகுகள் எந்தவிதமான முன் அனுமதி பெறாமல் தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பூம்புகார் மற்றும் தற்காஸ் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
1983-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உடனடியாக மேற்கண்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த நோட்டீசில் மீன்வள துறையினர் கூறியுள்ளனர்.
அண்டை மாநில விசைப்படகுகள் பூம்புகார், தற்காஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story