நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 29 Aug 2021 6:02 PM GMT (Updated: 2021-08-29T23:32:53+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்:
தடுப்பூசி முகாம்
நாமக்கல் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டு கொண்டனர். முன்னதாக தடுப்பூசி செலுத்தி கொள்ள நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருந்ததை காண முடிந்தது.
இதேபோல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் முதலைப்பட்டி, திண்டமங்கலம், கோனூர் மற்றும் எர்ணாபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், பள்ளிபாளையம் மற்றும் சேந்தமங்கலம் என நாமக்கல் மாவட்டத்தில் 85-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
15 ஆயிரம் பேர்
நாமக்கல் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 ஆயிரத்து 480 பேருக்கு கோவேச்சின் தடுப்பூசியும் செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஆசிரியர்கள் உள்பட 18 வயதுக்கு மேற்பட்ட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 
இவ்வாறு அவர்கள் கூறினர். இதனிடையே நாமக்கல் நகராட்சியில் காவெட்டிப்பட்டி, நல்லிபாளையம், போதுப்பட்டி உள்பட 6 இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கொரோனோ தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story