கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேந்தமங்கலம்:
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாகும். இங்கு நாமக்கல் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா வருவது வழக்கம். அவர்கள் அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், சர்ப்ப விநாயகர் கோவில், பூங்கா ஆகிய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு செல்வார்கள். மேலும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவியில் குளித்து மகிழ்வார்கள்.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்ற பொதுமக்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்தநிலையில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் பிற நாட்களை போன்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ நேற்று முதல் அனுமதி வழங்கியது. இதையடுத்து விடுமுறை நாளான நேற்று கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
அங்கு கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 300 அடி உயர ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று தண்ணீர் கொட்டியது. இதனை பார்த்து ரசிக்க நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் தங்களது குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கையின் அழகில் தங்களை புகைப்படம் எடுத்து கொண்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் நேற்று கொல்லிமலை பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story