மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை
மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்,
மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல் திருட்டு
மதுரை ஐகோர்ட்டு விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டை தடுப்பது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மாவட்டத்தில் குண்டாற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இதில் திருப்தி அடையாத நீதிமன்றம் மாவட்ட நீதிபதியின் மூலம் அறிக்கை பெற்றநிலையில் அதிலும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் மணல் திருட்டை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
ஆனாலும் மாவட்டத்தில் பரவலாக மணல் திருட்டு நடைபெறுகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மாட்டு வண்டியில் தொடங்கி டிப்பர் லாரி வரை மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் நிலை தினசரி நிகழ்வாக உள்ளது.
ரகசியம்
போலீசார் இதனை கண்டுகொள்ளாத நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அவ்வப்போது மணல் திருட்டில் ஈடுபடும் டிப்பர் லாரிகளை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். ஆனால் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும் தொடர் நடவடிக்கை குறித்து முழுமையாக தெரியாத நிலையே உள்ளது. வழக்கமாக மணல் திருட்டு லாரியை ஓட்டி வரும் ஓட்டுனர்கள் லாரியை விட்டு விட்டு அப்படியே சென்று விடுகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் லாரியை போலீசில் ஒப்படைப்பதே வாடிக்கையாக உள்ளது.
மணல் திருட்டு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக ரகசியம் காக்கப்படுவதை தவிர்த்து வெளிப்படையாக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்பதன் மூலமே மணல் திருட்டு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால் தற்போதைய நிலையில் மணல் திருட்டு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக இல்லாத நிலையில் தினசரி மணல் திருட்டு பரவலாக நடைபெறும் நிலை உள்ளது.
கோரிக்கை
எனவே ஐகோர்ட்டு உத்தரவுப்படி மணல் திருட்டை தடுக்க வருவாய்த்துறை மற்றும் போலீசார் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவுக்கு தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படாததால் மணல் திருட்டு பரவலாக நடைபெறும் நிலை நீடிக்கிறது.
Related Tags :
Next Story