பாபநாசத்தில் பரபரப்பு:சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள் அள்ளி செல்ல முயன்றவர்களிடம் இருந்து மீட்ட அரசு பஸ் டிரைவர்


பாபநாசத்தில் பரபரப்பு:சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள் அள்ளி செல்ல முயன்றவர்களிடம் இருந்து மீட்ட அரசு பஸ் டிரைவர்
x
தினத்தந்தி 30 Aug 2021 1:12 AM IST (Updated: 30 Aug 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. அவற்றை அள்ளி செல்ல முயன்றவர்களிடம் இருந்து அரசு பஸ் டிரைவர் ஒருவர் மீட்டு போலீசில் ஒப்படைத்தார்.

பாபநாசம்:-

பாபநாசத்தில் சாலையில் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. அவற்றை அள்ளி செல்ல முயன்றவர்களிடம் இருந்து அரசு பஸ் டிரைவர் ஒருவர் மீட்டு 
போலீசில் ஒப்படைத்தார். 

சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள்

தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் திருப்பாலத்துறை மெயின் ரோடு பெட்ரோல் பங்க் பகுதியில் நேற்று மதியம் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன. அந்த ரூபாய் நோட்டுகள் காற்றில் அங்கும், இங்கும் பறந்தன. இதை பார்த்த அங்கிருந்த சிலர் 500 ரூபாய் நோட்டுகளை அள்ளிச்செல்ல முயன்றனர். 
அப்போது அந்த வழியாக திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கர்ணன் என்பவர் மினி வேனில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி அள்ளிச்செல்ல முயன்றவர்களிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுகளை மீட்டு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாளிடம் ஒப்படைத்தார்.

வாலிபரிடம் விசாரணை

அந்த பணத்தை போலீசார் எண்ணியபோது அதில் ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 500 இருந்தது. இந்த நிலையில் கும்பகோணம் கருணைக்கொலை வடக்கு தெருவை சேர்ந்த சூர்யா (வயது20) என்பவர் பாபநாசம் போலீஸ் நிலையத்துக்கு பதறியடித்தபடி ஓடி வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, கும்பகோணத்தில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ரூ.3½ லட்சத்தை நிதி நிறுவனத்தில் பெற்றதாகவும், அந்த பணத்தை பையில் எடுத்துக்கொண்டு கும்பகோணத்தில் இருந்து பாபநாசத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது பை தவறி விழுந்து விட்டதாகவும், சாலையில் கிடந்த பணம் தனக்கு சொந்தமானது என்றும் கூறினார். இதுதொடர்பாக சூர்யா போலீசாரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்தார். 

பாராட்டு

அதன்பேரில் போலீசார் பணம் சூர்யாவுக்கு உரியதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை மீட்டுக்கொடுத்த அரசு பஸ் டிரைவர் கர்ணனை போலீசார் பாராட்டினர். சாலையில் பணம் சிதறி கிடந்ததும், அவற்றை சிலர் அள்ளி செல்ல முயன்றதும் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story