போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
தினத்தந்தி 30 Aug 2021 1:14 AM IST (Updated: 30 Aug 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர்:

துப்பாக்கி சுடும் பயிற்சி
தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாரின் துப்பாக்கி சுடும் திறனை அறிந்து கொள்ளவும், அதை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஆண்டுதோறும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடத்தப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை நாரணமங்கலத்தில் உள்ள போலீசார் துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 25-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆர்வத்துடன் பங்கேற்பு
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பிஸ்டல் ரக துப்பாக்கியில் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவு படை போலீசார், தனிப்பிரிவு போலீசார், போலீஸ் நிலைய போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், 303 ரக துப்பாக்கிகளில் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. துப்பாக்கி ரகங்களை பொறுத்து சுடும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஆர்வத்துடன் போலீசார் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியினை மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பாராமன், இன்ஸ்பெக்டர் சுப்பையன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், வரதராஜ் ஆகியோர் அளித்து வருகின்றனர். நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி முடிவடைகிறது. இதில் சிறப்பாக சுடும் போலீசாருக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story