கிரேன் கம்பி அறுந்து விழுந்து வாலிபர் பலி


கிரேன் கம்பி அறுந்து விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 8:36 PM GMT (Updated: 2021-08-30T02:06:58+05:30)

கிரேன் கம்பி அறுந்து விழுந்து வாலிபர் பலியானார்

திருச்சி
திருச்சி வாழைக்காய் மண்டி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 25). திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (25). கட்டிட தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நேற்று காலையில் திருச்சி தென்னூர் புத்தூர் நால் ரோடு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சுமார் 70 அடி உயரத்தில் ராட்சத கிரேன் உதவியுடன் இரும்பு தொட்டியில் நின்று கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேனில் உள்ள கம்பி அறுந்து விழுந்ததில் இரும்பு தொட்டியில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் அவர்களது தலை, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து அவர்கள் இருவரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் அவர்களை பரிசோதித்த போது செல்வகுமார் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மேலும் படுகாயம் அடைந்த சரவணகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story